அரசியல்வாதிகளின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக சந்திரபாபுநாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
ஆந்திராவில் முக்கிய தலைவர்களின் தொலைபேசி மற்றும் செல்போன் உரையாடல்கள் மாநில புலனாய்வுத்துறையினரால் ஒட்டுக்கேட்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்குதேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி உள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பது, “ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் கடும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஜனநாயக அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
மாநில தேர்தல் ஆணையம், அரசு பணியாளர் தேர்வாணையம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து தற்போது எதிர்க்கட்சி தலைவர்கள், வக்கீல்கள், ஊடகத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்களை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மிரட்டி வருகிறது. குறிப்பாக எதிர்க்கட்சிகள், வக்கீல்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் தொலைபேசிகளை சட்டவிரோதமாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு பதிவு செய்து ஒட்டுக்கேட்டு வருகிறது. சட்டவிரோதமாக தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தெடர்பாக மத்திய அரசு தனி குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்” இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதேபோல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்பியான ரகு ராம கிருஷ்ண ராஜூவும் தனது இரண்டு செல்போன்கள் கடந்த சில மாதங்களாக மாநில புலனாய்வுத் துறையினரால் ஒட்டுக்கேட்கப்படுவதாகவும், வெளிநாட்டு எண்களில் இருந்து மிரட்டல் அழைப்புகள் வருவதாகவும் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மத்திய உள்துறை செயலாளருக்கு கடிதம் ஒன்று எழுதி இருக்கிறார்.