கோயம்பத்தூர் அருகே கார் மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். நஞ்சேகவுண்டன்புதூர்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் அண்ணாமலை மற்றும் முருகானந்தம் . இவர்கள் மூவரும் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழிலை செய்து வந்தனர். இந்நிலையில் வியாபாரத்திற்காக பொள்ளாச்சிக்கு அருகே உள்ள கெடிமேடு பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மதுரையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்த கார் இவர்கள் சென்று கொண்டிருந்த காரின் மீது பலமாக மோதியது. இதில் அண்ணாமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விஜயகுமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த முருகானந்தம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் .பின்பு அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.