பொங்கல் பரிசு பொருள்கள் வருகிற 9-ந் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது. இதில், ரேஷன் அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே ரூ.1,000 பெற முடியும்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே இந்த திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில், அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் காரணமாக , பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், வருகிற 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 4 நாட்கள் ரேஷன் கடைகள் மூலம் இதை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அவ்வாறு வாங்க வரும்போது, ரேஷன் அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே பெற முடியும். ரேஷன் அட்டையில் பெயர் இல்லாதவர்கள், பெயர் உள்ளவர்களில் ஒருவரின் ஆதார் அட்டையை வைத்தோ, அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை (‘பாஸ்வேர்டு’) வைத்தோ தான் பொங்கல் பரிசு தொகுப்பை பெற முடியும். இதற்கான உரிய பதிவுகள் ஒப்புதல் படிவத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.
பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்கப்பட்டவுடன், பதிவுசெய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) உடனடியாக அனுப்பப்படும். இதனால், யாரும் ஏமாற்றவோ, ஏமாறவோ முடியாது. குறிப்பிட்ட 4 நாட்களில் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்காதவர்களுக்கு, வருகிற 13-ந் தேதி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.