பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் இன்று முதல் தொடங்கியது. இன்று முதல் வருகின்ற 13ஆம் தேதிவரை அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொதுமக்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
வழங்கப்படும் பொருட்கள்
- ஒருகிலோ பச்சரிசி
- ஒருகிலோ சர்க்கரை
- 2 அடி நீள கரும்பு துண்டுகள்
- 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை
- 5 கிராம் ஏலக்காய்
- ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஆயிரம் ரூபாய் பணம்
வேலூர்
வேலூரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று வழங்கப்படுவதையொட்டி காலை 7 மணி முதல் பொதுமக்கள் கூட்டம் கூடியது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மணிக்கணக்கில் காத்திருந்த பொதுமக்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கிச் சென்றனர்.
பொருட்கள் வழங்கும்போது நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வரிசையில் நிற்பதில் பொதுமக்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அதனை சரிசெய்ய ரேஷன் கடைகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்தி 66 ஆயிரத்து 499 குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி இன்று தொடங்கியது. பொங்கல் பரிசு பெறுவதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான அசோக்குமார், முன்னாள் பால்வளத் தலைவர் தென்னரசு, துணைத் தலைவர் கோவிந்தன் ஆகியோர் பங்கேற்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
கடலூர்
பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வாங்குவதற்காக பொதுமக்கள் கடை திறப்பதற்கு முன்பாகவே நியாயவிலைக் கடை முன்பு குவிந்தனர். நியாயவிலைக் கடைகள் முன்பு அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாத வண்ணம், போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
விருதுநகர்
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்குவதற்காக வெட்டவெளியில் தலையில் துணியை போட்டுக் கொண்டு வரிசையில் நின்று, பொங்கல் பரிசுத் தொகுப்பை மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச்சென்றனர்.
தருமபுரி
தருமபுரி பாரதிபுரம் நியாய விலைக் கடையில், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல் பொங்கல் பரிசுப் பொருள் விநியோகத்தை தொடங்கிவைத்தார். பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கிச்சென்றனர்.
கரூர்
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை சார்பில் கரூர், வெங்கமேடு, மண்மங்கலம், நெரூர் போன்ற இடங்களில் நகர, கிராமப்புற பகுதியில் இருக்கக்கூடிய குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பும், ஆயிரம் ரூபாய் பணமும், இலவச வேஷ்டி சேலைகள் போன்றவை வழங்கப்பட்டன