தஞ்சை மாவட்டத்தில் தந்தையிடம் பொங்கல் பரிசு தொகையை கேட்டு தகராறு செய்ததால் மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகில் உள்ள சிரமேல்குடி பாலாயி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ராமன்(78) என்பவர். இவருக்கு பாலசுப்பிரமணியம் (50), விஸ்வலிங்கம் (45) என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு திருமணமாகி விவசாயக் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் குடும்பத் தலைவரான ராமன் நேற்று தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகையான 2500 ரூபாயை வாங்கி வந்தார். அவரது இளைய மகன் விஸ்வலிங்கம் வீட்டிற்கு மது அருந்தி வந்துள்ளார். அதன்பின் தன் தந்தையிடம் பொங்கல் பரிசு தொகையை கேட்டு சண்டையிட்டு உள்ளார். அதற்கு அவரது தந்தை, நீ தான் வேலைக்கு செல்கிறாயே அதனால் உனக்கு பணம் தர முடியாது என்று கூறினார்.
இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த விஸ்வலிங்கம்,தனது தந்தை என்றும் பாராமல் ராமனை அரிவாளால் வெட்டிவிட்டார். அவர் வெட்டியதில் ராமனின் கையில் வெட்டு விழுந்தது. அதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். இதனை அறிந்த மூத்த மகன் பாலசுப்பிரமணியம் தந்தையை அரிவாளால் வெட்டிய இளைய மகன் விஸ்வலிங்கத்திடம் எதற்காக இப்படி செய்தாய் என்று கேட்டுள்ளார். அவர்கள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது.
பாலசுப்ரமணியன் அருகில் இருந்த மரக்கட்டையை எடுத்து விஸ்வலிங்கத்தை பலமாகத் தாக்கி விட்டார். இதில் பலத்த காயமடைந்த விஸ்வலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவத்தை அறிந்த சிரமேல்குடி கிராம நிர்வாக அதிகாரி பிரபாகரன், மதுக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பாலசுப்பிரமணியத்தை போலீசார் கைது செய்தனர். பொங்கல் பரிசு தொகையால் குடும்பத் தகராறு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.