அரிசி வாங்கும் ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் இந்த வருடம் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன், 1000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவி்த்து இருந்தார். அந்த அறிவிப்பை அடுத்து பொங்கல் பரிசு வழங்குவதற்கான ஆயத்த பணிகள் தமிழகம் முழுவதும் சுமார் 33 ஆயிரம் ரேஷன் கடைகளில் இன்று (டிச,.26) தொடங்கவுள்ளது. அந்த வகையில் குறிப்பிட்ட ரேஷன் கடையில் எந்தெந்த நாள், நேரத்தில் எந்தெந்த தெருவை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசை பெறலாம் எனும் விவரங்கள் அடங்கிய டோக்கன்கள் அச்சிடப்பட்டுள்ளது.
இந்த டோக்கன்களை வீடுவீடாக விநியோகம் செய்யும் பணியானது தமிழகம் முழுவதும் நாளை (டிச,.27) தொடங்க இருப்பதாக நுகர்பொருள் வாணிப கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. வருகிற ஜனவரி 2 ஆம் தேதி பொங்கல் பரிசு வழங்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் சென்னையிலும், அமைச்சர்கள் அவர்களின் சொந்த மாவட்டங்களிலும் அன்றைய தினமே துவங்கி வைக்க இருகின்றனர். போகிப்பண்டிகை வரையிலும் பொங்கல் பரிசுப் பொருட்கள் உடன், ரொக்கம் 1000 ரூபாய் ரேஷன் கடைகள் வாயிலாக விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
தினசரி 100 -200 ரேஷன் கார்டுதாரர்கள் வரை பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி டோக்கன்கள் விநியோகிப்பட இருக்கிறது. ரேஷனில் ஒவொரு மாதமும் பொருட்களை வாங்கும் போது குடும்ப தலைவரோ, ரேஷன் அட்டையில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்களோ தங்களது கைவிரல் ரேகையை பதிவிடும் நடைமுறை இருக்கிறது. இந்த நடைமுறை பொங்கல் பரிசுப்பொருட்கள் விநியோகம் செய்வதிலும் பின்பற்றப்படும். ஆகவே ரேஷன் அட்டையில் பெயர் இல்லாத நபர்கள் 1000 ரூபாய் ரொக்கப் பரிசை வாங்க முடியாது. பணி நிமித்தம் உள்ளிட்ட காரணங்களால் வெளியூர் செல்லும் குடும்ப அட்டைதாரர்கள், பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற அவகாசம் வழங்கப்படும் என நுகர்பொருள் வாணிப கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.