பொங்கல் பொருட்கள் வாங்க உடன்குடி சந்தையில் மக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பொங்கல் திருநாளுக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடியில் நேற்று பொங்கல் சந்தை நடைபெற்றது. தெரு வீதிகளில் அதிகாலை முதல் மஞ்சள் குலை , கரும்பு, பனங்கிழங்கு போன்றவை குவித்து வைக்கப்பட்டிருந்தன. அதை போலவே குத்துவிளக்கு, பொங்கல் பானை உள்ளிட்ட பொங்கல் பாத்திர பொருட்களும் ஏராளமாக விற்பனைக்கு இருந்தது. உடன்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் பொங்கல் பொருட்களை வாங்க போட்டி போட்டுக்கொண்டு குவிந்தனர்.
பொங்கல் பண்டிகைக்கு சகோதரிகளுக்கும் திருமணமான மகள்களுக்கும் சீர்வரிசை கொடுப்பதற்காக பொதுமக்கள் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கூட்டம் கூட்டமாக பொருட்களை வாங்க குவிந்தனர். இதனால் சந்தை களைகட்டியது. அதோடு இங்கு கூட்டம் கூடியதால் காலையிலிருந்து இரவு வரை உடன்குடி பகுதியில் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று பெரும் அவதிக்குள்ளானார்கள்.