பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ் மக்கள் அனைவருக்கும் சத்குரு பொங்கல் வாழ்த்து தெரிவித்ததோடு இயற்கை விவசாயம் தமிழகம் முழுவதும் பரவ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு சத்குரு அனைவருக்கும் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அச்செய்தியில், “தமிழ் மக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். பொங்கல் என்றால் நாம் சாப்பிடும் பொருள் அல்ல. பொங்கல் என்பதை நம் கலாச்சாரத்தில் உழவர் திருநாளாக கொண்டாடி வருகிறோம். முக்கியமாக இது விவசாயத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு மிகப்பெரிய விழா. இந்நாளில் படித்தவர்களும் இளைஞர்களும் அவரவர் கிராமங்களுக்கு சென்று விவசாயம் எப்படி நடக்கிறது என்பதை பார்வையிட வேண்டும்.
நீங்கள் விரும்பினால் ஈஷா விவசாய இயக்கத்தின் மூலம் உங்களுக்கு இயற்கை விவசாயத்தைக் கற்றுக் கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். அதை கற்றுக் கொண்டு நீங்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று குறைந்த பட்சம் 10 பேருக்காவது கற்றுக்கொடுக்க வேண்டும். இப்படி செய்தால் நாட்டில் ஒரு பெரும் புரட்சியே ஏற்படும். மேலும் நெல் உள்ளிட்ட அனைத்து பயிர்களையும் இயற்கை விவசாயத்தின் மூலம் விளைவிக்க வேண்டும். நம் முன்னேற்றத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் இது மிகவும் அவசியமானது .
தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்தை கொண்டு வந்து ஒவ்வொரு உணவையும் சத்து மிக்க உணவாக மாற்ற வேண்டும். மண்ணை சத்தான மண்ணாக வைக்க வேண்டும். இயற்கையை நல்ல நிலையில் வைத்து இயற்கை விவசாயம் செய்ய வேண்டும். மேலும் பொருளாதாரத்தில் இது விவசாயிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும். ஆகவே இயற்கை விவசாயத்தை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் உறுதியை தமிழ் மக்கள் அனைவரும் இந்த திருநாளில் எடுக்க வேண்டும் . அதிலும் குறிப்பாக தமிழ் இளைஞர்கள் இந்த உறுதி மொழியை கட்டாயம் எடுக்க வேண்டும்” என்று வெளியிட்டிருந்தார்.