Categories
சினிமா தமிழ் சினிமா

“பொன்னியின் செல்வன் VS நானே வருவேன்” எதற்காக போட்டி….? செல்வராகவன் திடீர் விளக்கம்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் தற்போது சாணி காயிதம், பீஸ்ட் மற்றும் பகாசூரன் போன்ற திரைப்படங்கள் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் நானே வருவேன் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. தனுஷ் மற்றும் செல்வராகவன் இணைந்தாலே கண்டிப்பாக வெற்றி கூட்டணி தான் என்ற கருத்து கோலிவுட் வட்டாரத்தில் பரவலாகவே இருந்தது. அதாவது நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவான மயக்கம் என்ன, புதுப்பேட்டை, காதல் கொண்டேன் போன்ற திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. மயக்கம் என்ன திரைப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 11 வருடங்களுக்குப் பிறகு நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவன் இணைந்துள்ளனர்.

இதனால் நானே வருவேன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் படத்துடன் ரிலீசானதால் நானே வருவேன் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பரவலாக கருத்து நிலவுகிறது. இதனால் எதற்காக பொன்னியின் செல்வன் படத்துடன் நானே வருவேன் திரைப்படத்தை வெளியிட்டார்கள் என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டார்கள்.

இதற்கு தற்போது இயக்குனர் செல்வராகவன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, ஒரு காலத்தில் பல படங்கள் ஒரே சமயத்தில் ரிலீசானால் ரசிகர்கள் அதை திருவிழா போல் கொண்டாடுவார்கள். ஆனால் தற்போது அந்த சூழ்நிலை மாறிவிட்டது. நாங்கள் பழைய நிலையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் படத்தை ரிலீஸ் செய்தோம். அதோடு தொடர் விடுமுறையால்  ரசிகர்கள் கண்டிப்பாக 2 படங்களையும் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்த்தோம். மற்றபடி பிரம்மாண்டப் படமான படமான பொன்னியின் செல்வன் படத்தோடு மோத வேண்டும் என்ற நோக்கம் எல்லாம் கிடையாது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |