பூங்காவிற்குள் ஒற்றை காட்டு யானை நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூரில் உள்ள பொள்ளாச்சி வனப்பகுதியில் மான், காட்டுமாடு, சிறுத்தை ,கரடி, காட்டு யானை போன்ற பல்வேறு விலங்குகள் வசித்து வருகிறது. இங்கு வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று ஆழியார் சோதனை சாவடி வண்ணத்துப்பூச்சி பூங்கா அருகே நுழைந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அவர்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து வனச்சரகர் புகழேந்தி கூறுகையில்,” ஆண்டிற்கு ஒரு முறை ஒற்றை காட்டு யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறுகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக வனத்துறை உயர் அலுவலர்கள் ஆலோசனைப்படி பல்வேறுபட்ட நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறோம்” என்று கூறினார்.