தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து தொற்று குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் தற்போது சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் நான்காயிரம் வழங்கப்படவுள்ளதாக அறிவித்திருந்தது. அதில் முதல் தவணை கடந்த மாதம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது தவணை ஜூன் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.
அதன்படி, இரண்டாவது தவணை ரூ.2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு இன்று முதல் இம்மாத இறுதிவரை ரேஷன் கடைகளில் பெறலாம் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதைத்தொடர்ந்து இன்று அனைத்து ரேஷன் கடைகளிலும் பணமும், 14 வகை மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது. அதைப் பெற்ற தாய்மார்கள் புன்னகையோடு வீடு திரும்பிய புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஸ்டாலின்” ஏழைத் தாய்மார்களின் சிரிப்பே நமது அரசின் சிறப்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.