ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் மக்கள் வெளியேறுவதை தொடர்ந்து பூட்டி இருக்கும் வீடுகள் மற்றும் கடைகளில் கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் ஜெர்மனியில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ள பாதிப்பினால் 110 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 1300 க்கும் மேலான மக்கள் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஜெர்மனி மக்கள் தங்களின் வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வீடுகள் மற்றும் கடைகள் யாருமின்றி பூட்டப்பட்டிருப்பதால் கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதாக போலீசார் கூறியுள்ளனர்.
அதிலும் குறிப்பாக ஜெர்மனியில் North Rhine-Westphalia மாகாணத்தின் Stolberg பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் விலையுர்ந்த பொருட்கள் சூறையாடப்படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்தப் பகுதயில் உள்ள ஒரு நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவங்களினால் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். இந்த வெள்ளப் பெருக்கின் காரணமாக அணைகள் உடைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.