பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள கோம்பை தோட்டம் பகுதியில் அப்துல் பாரூக் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6-ஆம் தேதி அப்துல் பாரூக் வீட்டிற்கு தண்ணீர் கேன் கொடுப்பதற்காக ராஜேந்திரன் என்பவர் சென்றுள்ளார். அப்போது வீட்டின் உள்பக்கம் கதவு பூட்டி இருந்ததால் ராஜேந்திரன் கதவை தட்டியுள்ளார்.ஆனால் அப்துல் பாரூக் நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் ராஜேந்திரன் அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினரும் கதவை தட்டிப் பார்த்துவிட்டு திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளனர்.
அப்போது அப்துல் பாரூக் உட்கார்ந்த நிலையில் இறந்து கிடந்ததை அவர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்துல் பாரூக்கின் உடலை உடனடியாக கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் காவல்துறையினர் இது குறித்து நடத்திய விசாரணையில் அப்துல் பாரூக் கடந்த 1998-ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதும், அதன் பின் அவர் 2008-ஆம் ஆண்டு நன்னடத்தை அடிப்படையில் சிறையிலிருந்து வெளியே வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அப்துல் பாரூக் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்துல் பாரூக் கடந்த 6-ஆம் தேதி பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.