பூட்டியிருந்த வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி நகர் பகுதியில் பாப்பா என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக பாப்பா அவரது உறவினருடன் சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் பாப்பா வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை அக்கம்பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பாளையங்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வீட்டில் சென்று பார்த்தபோது பீரோவில் உள்ள பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சென்னையில் உள்ள பாப்பாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அதில் வீட்டில் வைத்திருந்த ரூ.3 ஆயிரம் மற்றும் 3 பவுன் தங்க நகை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.