போப் பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒளி அலங்காரங்களுடன் நிறுத்தாமல், ஏழை மக்களுக்கு உதவுங்கள் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
டிசம்பர் 25-ம் தேதியான இன்று, உலக நாடுகள் முழுவதிலும், கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனைகளில் பங்கேற்று கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தங்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.
இந்நிலையில், வாடிகன் நகரத்தில் இருக்கும் புனித பீட்டர் தேவாலயத்தில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. அதில் போப் பிரான்சிஸ் உரையாற்றியபோது அவர் கூறியதாவது, “சமூகத்தில் உயரிய அந்தஸ்தை பெறுவதிலோ அல்லது வெற்றிக்கான தேடலிலோ வாழ்க்கையை கழிக்காமல் இல்லாத மக்களுக்கு உதவி செய்வதில் நாட்களை செலவிடுங்கள்” என்று கேட்டிருக்கிறார்.
மேலும், ஒவ்வொரு சிறிய விஷயங்களையும் மதிக்க வேண்டும் என்று மக்களுக்கு வலியுறுத்தியிருக்கிறார். “இறைவன் தன்னை என்றைக்கும் உயர்த்தி கொள்ளவில்லை, தன்னை தாழ்த்திக் கொண்டிருக்கிறார். நம்மிடம் நெருங்கி வருவதற்கும், நம் நெஞ்சங்களை தொடுவதற்கும், நம்மை பாதுகாக்கவும் அவர் தேர்ந்தெடுத்திருக்கும் வழி, தன்னை தாழ்த்திக் கொள்வது தான்” என்று கூறியிருக்கிறார்.