மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் மோகன்லால் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது மான்ஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை புலி முருகன் படத்தை இயக்கிய வைஷாக் இயக்கியுள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவான புலி முருகன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதால் மான்ஸ்டர் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருக்கும் நிலையில், தற்போதிருந்தே முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை அரபு நாடுகளில் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஓரினச்சேர்க்கையாளர்களை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது போன்ற படங்களை அரபு நாடுகளில் வெளியிட மாட்டார்கள். இதனால்தான் மான்ஸ்டர் திரைப்படத்திற்கு அரபு நாடுகளில் தடை விதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், மோகன்லால் சமீபத்தில் ஒரு பேட்டியில் மான்ஸ்டர் திரைப்படத்தில் ஒரு துணிச்சலான முடிவை எடுத்து இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். ஒருவேளை ஓரினச்சேர்க்கையாளர்கள் குறித்து தான் அப்படி கூறியிருக்கிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதனையடுத்து மான்ஸர் திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் நிவின் பாலியின் படவேட்டு திரைப்படத்திற்காக திரையரங்குகளை ஒதுக்குவதாகவும் கூறப்படுகிறது. மேலும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து படத்தை மறு சென்சார் செய்து வெளியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.