தடுப்பூசி செலுத்தாததால் ஏமாற்றமடைந்த பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதிலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன்படி குமரி மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் மருத்துவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் முகாம்களில் தடுப்பூசி செலுத்த வருபவர்களின் கூட்டம் அலைமோதி காணப்பட்டதால் தட்டுப்பாடு ஏற்பட்டு 2 நாட்களாக தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக தக்கலை அரசு மருத்துவமனையில் ஏராளமான நபர்கள் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்தனர். அப்போது மருத்துவமனை ஊழியர்கள் அங்கு சென்று தடுப்பூசி மருந்து இல்லாததால் வந்ததும் செலுத்தப்படுவதாக அவர்களிடம் கூறியுள்ளனர். இதனால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் மருத்துவ ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென்று தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த தக்கலை காவல்துறையினர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன் பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை நிறுத்திவிட்டு கலைந்து சென்றுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் சில நாட்களுக்கு முன்பு வந்த 14 ஆயிரம் கோவிஷீல்டு மற்றும் 2 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் முழுவதுமாக பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு இருக்கின்றது.எனவே புதிதாக தடுப்பூசி மருந்துகள் வராததால் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.