ஏலகிரி காவல்நிலையம் முன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முத்தனூர் பகுதியில் ரயில்வே ஊழியர் மனோகரன் மற்றும் அதே பகுதியில் 35-க்கும மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த இடத்தின் உரிய ஆவணங்கள் வேறொரு தனி நபரிடம் இருப்பதால் மனோகரன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து விசாரணை நிலுவையில் இருக்கின்றது. எனவே இந்த வழக்கை நடத்துவதற்கு தேவையான செலவை அந்த பகுதியில் இருக்கக்கூடிய 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரிடம் மாதம் மாதம் வசூலித்து மனோகரன் வழக்கு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்தப்பகுதியில் வசிக்கக்கூடிய 4 குடும்பங்கள் மட்டும் மனோகரனுக்கு ஆதரவு தெரிவிக்காமல் அவருக்கு எதிராக செயல்பட்டதால் 2 ஆண்டுகளாக அவர்களை ஊரை விட்டு தள்ளி வைத்துள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஊரைவிட்டு தள்ளி வைத்த 4 குடும்பங்களும் சேர்ந்து மனோகரன் உட்பட 4 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வழக்குப்பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து ரயில்வே ஊழியர் மனோகரனின் ஆதரவாளர்கள் ஏலகிரிமலை காவல் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னர் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி போராட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளார். அந்த விசாரணையில் அவர்கள் கூறியதாவது 4 குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் மனோகரன் உட்பட 5 பேரை வழக்குப்பதிவு செய்து இருப்பதாகவும், நாங்கள் கொடுத்த புகாரை ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைதொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் அங்கிருந்த அனைவரும் கலைந்து சென்றனர்.