தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை அரசிடம் ஒப்படைப்பதை நிறுத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சிறுபான்மை அல்லாத தனியார் பொறியியல் கல்லூரிகள் 65 சதவீத இடங்களையும் சிறுபான்மை கல்லூரிகள் 50 சதவீத இடங்களையும் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக ஒதுக்குகின்றன. அதிகமான இடங்களை அரசுக்கு ஒதுக்கும் படி தனியார் பொறியியல் கல்லூரிகளை அரசு நிர்பந்திப்பதாக கூறி கோவை தொண்டாமுத்தூர் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியில் தலைவர் தமிழரசி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் குற்றச்சாட்டை மறுத்த உயர்கல்வித் துறைச் செயலாளர், மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் கூடுதல் இடங்களை ஒதுக்கும் படி தனியார் கல்லூரிகளை நிர்பந்திப்பது இல்லை என்றும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தனியார் கல்லூரிகள் தாமாக முன்வந்து ஒப்படைக்கும் பட்சத்தில் அவை அரசு ஒதுக்கீட்டு இடங்களாக பரிசீலிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
அரசின் இந்த உத்தரவாதத்தை பதிவு செய்த நீதிபதி தனியார் கல்லூரிகளில் தாமாக முன்வந்து நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை அரசிடம் சமர்ப்பிக்க எந்த தடையும் இல்லாததால் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை அரசிடம் ஒப்படைப்பதை நிறுத்தும்படி கூற முடியாது என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.