தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இவர் தற்போது ஆந்திர மாநிலத்தில் அமைச்சராக இருக்கிறார். இவர் அரசியல் ரீதியாக தன்னை எதிர்க்க முடியாதவர்கள் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து ரோஜா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, நான் சினிமா மற்றும் அரசியலில் எத்தனையோ பிரச்சனைகளை சமாளித்து இருக்கிறேன். ஆனால் சமீபகாலமாகவே சமூக வலைதளங்களில் தொடர்ந்து என்னை பற்றியும் என் குடும்பத்தை பற்றியும் அவதூறான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். என் சகோதரர் பிறந்த நாளில் முத்தமிட்டதை கூட ஆபாசமாக்கி அசிங்கப்படுத்தினர்.
இப்போது என்னுடைய மகளின் போட்டோவை மார்பிங் செய்தும், என்னைப் பற்றியும் தொடர்ந்து ஆபாசமான புகைப்படங்களை வெளியிடுகிறார்கள். இதைப் பார்த்து என் மகள் வருத்தம் அடைந்ததோடு இதெல்லாம் தேவையா என்று நேரடியாக என் முகத்தை பார்த்தே கேட்கிறாள். இந்த சம்பவம் எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. மேலும் பிரபலங்களுக்கு இதெல்லாம் சாதாரணமாக நடப்பவை தான். இதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டால் முன்னேற முடியாது என்று என்னுடைய குழந்தைகளுக்கு நானே தைரியம் சொல்லி வருகிறேன் என்று கூறினார்.