முன்னாள் ஜனாதிபதி ஆட்சி காலத்தில் அமெரிக்காவின் வர்த்தக அமைச்சராக இருந்தவர் உட்பட 7 தலைவர்களின் மீது பொருளாதார தடையை விதித்த சீன அரசாங்கத்திற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஹாங்காங்கில் கடந்தாண்டு சீன அரசாங்கம் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்கா ஹாங்காங்கிலுள்ள பல சீன அதிகாரிகளின் மீது பொருளாதாரம் ரீதியாக தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அதோடு மட்டுமின்றி அமெரிக்கா தன்னுடைய வணிக சமுதாயத்திற்கு ஒரு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
அதாவது ஹாங்காங்கில் வணிகம் செய்வது தொடர்பான எச்சரிக்கையும் வணிக சமுதாயத்திற்கு கூறியுள்ளது. இதனையடுத்து அமெரிக்காவின் இந்த செயலுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்த சீனா தற்போது அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில் இருந்த வர்த்தக அமைச்சர் உட்பட 7 மூத்த அதிகாரிகளின் மீது பொருளாதாரம் ரீதியாக தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும் சீனா அமெரிக்க நிறுவனங்களின் சிலவற்றின் மீதும் பொருளாதார ரீதியாக தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த தகவலை சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ள நிலையில் சீனாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா தன்னுடைய கண்டனத்தை அறிவித்துள்ளது.