பொருளாதார நெருக்கடி காரணமாக பெண் குழந்தைகள் முதியவர்களுக்கு விற்கப்படும் அவலநிலை ஆப்கானில் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்பு அந்நாடு முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றது. மேலும் ஆப்கானிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வந்த பொருளாதார உதவிகள் அனைத்தையும் உலக நாடுகள் நிறுத்திக் கொண்டன. இதனால் ஆப்கானில் தற்பொழுது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தலீபான்களின் ஆட்சிக்கு பயந்து மக்கள் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாத மக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாமல் ஆப்கானில் அன்றாட பிழைப்புக்காக அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது அங்கு திருமணம் என்ற பெயரில் பெண் குழந்தைகளை முதியவர்களுக்கு விற்பனை செய்யும் அவலநிலை சமீப காலமாக நடந்து வருகின்றது. அதிலும் வறுமையில் வாடும் குடும்பங்கள் இதுபோன்று தங்கள் பிள்ளைகளை விற்பனை செய்யும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. குறிப்பாக அப்துல் மாலிக் என்பவர் தனது ஒன்பது வயது மகளான பர்வானா மாலிக்கை கடந்த மாதம் 55 வயதான முதியவர் ஒருவருக்கு விற்றுள்ளார்.
இந்த செய்தியானது சர்வதேச பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. மேலும் எட்டு பேர் கொண்ட குடும்பத்தை பராமரிக்க போதிய வசதி இல்லாமலும் பொருளாதார நெருக்கடியாலும் பர்வானா மாலிக்கை அப்துல் விற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே இதற்கு முன்பாக தனது 12 வயது மகளை இன்னொரு முதியவருக்கு விற்பனை செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக சிறுமி பர்வானாவோ ‘ நான் நன்றாக படித்து ஆப்கானிஸ்தானில் ஆசிரியையாக பணியாற்றுவேன்’ என்று கூறியுள்ளார்.