இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக மக்களுக்கு பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் முக்கிய பலன் என்னவென்றால் வட்டி விகிதம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக சேமிப்பு திட்டங்களில் சேருவோருக்கு சேமித்த தொகையுடன் கூடுதல் வட்டி கிடைப்பதால் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு திட்டத்துக்கும் ஏற்றவாறு மாறுபடுகிறது. பங்கு சந்தை மற்றும் பிற தொழில்களில் முதலீடு செய்வது எந்த அளவுக்கு லாபத்தையும், பாதுகாப்பையும் அளிக்கும் என்பது சந்தேகம். பாதுகாப்பான கடினம் இன்றி முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு அஞ்சலக திட்டங்கள் கை கொடுக்கும்.
இதனிடையில் செல்வ மகள் சேமிப்பு திட்டம், காப்பீடு திட்டங்கள், வருங்கால வைப்பு நிதி திட்டங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அவ்வரிசையில் மாதாந்திர வருமான திட்டமும் இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 1,500 ரூபாய் முதல் ரூ.4.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். மேலும் இத்திட்டத்தில் தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக 4.5 லட்சமும், கூட்டுக் கணக்கில் அதிகபட்சம் 9 லட்சம் வரையும் சேமிக்கலாம். இந்த மாத வருவாய் திட்டத்துக்கு தற்போதைய வட்டி விகிதம் வருடத்துக்கு 6.6% என்ற விகிதம் அளிக்கப்படுகிறது.
மேலும் இதில் கிடைக்ககூடிய வட்டிகளுக்கு வரி உண்டு. அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டத்தில் நீங்கள் சேர்ந்த தேதியில் இருந்து, ஒரு மாதம் நிறைவு பெற்ற பிறகுதான் வட்டி வழங்கப்படும். வட்டி தொகையை நீங்கள் மாதந்தோறும் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் வட்டி தொகைக்கு கூடுதல் வட்டி வழங்கப்படாது. இந்த சேமிப்பு திட்டம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. மாதாந்திர சேமிப்புக்கு செலுத்த வேண்டிய தொகை குறைந்த அளவாக இருப்பதால் ஏராளமான மக்கள் இந்த திட்டத்தில் சேர முன்வருகின்றனர்.