தபால் நிலைய சேமிப்புக் கணக்குகளில் இருந்து பணத்தைத் திருடி மோசடி செய்த அதிகாரியை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்மாம்பட்டு கிராமத்தில் ஒரு தபால் நிலையம் உள்ளது. அங்கு உதவிக் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளரான பிரவின் என்பவர் சில அதிகாரிகளோடு இணைந்து கடந்த சில மாதங்களுக்கு முன் தபால் நிலையத்தின் சேமிப்புக் கணக்குகளைத் தணிக்கை செய்துள்ளனர். அந்த தணிக்கையில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை கிளை அதிகாரியாக வேலைப் பார்த்து வந்த ராஜகுரு என்பவர் பணமோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி ராஜகுரு, கமலகண்ணன் மகள் நிமாஷினி என்ற கணக்கிலிருந்து 17000 ரூபாயும், செந்தமிழ்ச்செல்வியின் மகள் யாம்மொழி என்ற கணக்கிலிருந்து 11000 ரூபாயும், ஜெயராணி மகள் சாதனா என்ற கணக்கிலிருந்து 20000 ரூபாயும் என மொத்தம் 48000 ரூபாயை பணமோசடி செய்தது உறுதியாகியுள்ளது.
இதுதொடர்பாக தபால் நிலைய அதிகாரி பிரவின் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜகுருவைத் தேடி வந்துள்ளனர். இதனையடுத்து வெளியூருக்கு தப்பிச் செல்ல முயன்ற ராஜகுருவை தனிப்படை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது சிறையில் அடைத்துவிட்டனர்.