மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னதாக தபால் துறை தேர்வுகள் இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது. கடந்த 14-ம் தேதி இந்தியா முழுவதும் தபால்துறை தேர்வுகள் நடந்தது. இதில் முதல் தாளில் இருந்த கேள்விகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றருந்தன. இதையடுத்து தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக தமிழகதில் திமுக, அதிமுக மற்றும் பல கட்சிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற மாநிலங்களவையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு, அவை தலைவர் இருக்கையை முற்றுகையிட்டனர். இதனால் அவை 4 முறை முடங்கியது. இதையடுத்து தமிழக எம்பிக்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் என்றார். மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அஞ்சல் துறை தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்தார். இதையடுத்து அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு தமிழக எம்பிக்கள் நன்றி தெரிவித்தனர்.