சட்டவிரோதமாக கஞ்சா கடத்துவதற்கு முயற்சி செய்த 4 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கஞ்சா கடத்துவதாக கடந்த 26-ஆம் தேதி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சுங்கத்துறை உதவி ஆணையர் செந்தில்நாதன், கண்காணிப்பாளர்கள் பாலமுரளி, ரமேஷ், கழுகாசலமூர்த்தி, ஆய்வாளர் மாசிலாமணி போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது கீச்சாங்குப்பம் அருகே புதிய துறைமுகம் பகுதியில் மீன்பிடி பைபர் படகில் சிலர் பெரிய அளவிலான பொட்டலங்களை ஐஸ்பெட்டியில் ஏற்றிக் கொண்டு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவர்களை அதிகாரிகள் பிடிக்க முயன்றபோது 4 பேர் ஆற்றில் குதித்தனர். மேலும் கரையில் நின்ற 4 பேர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.
அதன்பின் அதிகாரிகள் படகை சோதனை மேற்கொண்டு அதில் இருந்த 2 கோடி ரூபாய் மதிப்பிலான 280 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் படகு மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சுங்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 8 பேரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் தஞ்சாவூர் இன்றியமையாத பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதியான சண்முகவேல் முன்னிலையில், படகு உரிமையாளர் குணசீலன், விஜய், சிவசந்திரன், மற்றொரு குணசீலன் ஆகிய 4 பேரும் சரணடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 4 பேரையும் வருகின்ற 25- ஆம் தேதி வரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். இதனைதொடர்ந்து 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.