போதை தரும் மாத்திரைகளை தனி நபர்களுக்கு விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்து உள்ளனர்.
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த பட்டதால் டாஸ்மாக், மதுபானக்கடைகள் திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால் மதுவினை குடிக்க முடியாத ஏக்கத்தில் பலர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள துணை சூப்பிரண்டு தேன்மொழிவேல் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் மருந்து கடை உரிமையாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும் இந்த கூட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் முன்னிலை வகித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மருந்து கடைகளை தவிர அனைத்து கடைகளையும் மூடுவதற்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே மது குடிக்க முடியாத ஏக்கத்தில் மது பிரியர்கள் மருந்து கடைக்கு சென்று போதை மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே அரசின் உத்தரவுப்படி மருந்து கடைகள் இயங்கும் பட்சத்தில் போதை தரும் மருந்துகளை தனிநபருக்கு கட்டாயம் விற்பனை செய்யக்கூடாது எனவும் அவ்வாறு விதிமுறைகளை மீறி தனிநபருக்கு விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட மருந்தகங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.