பிரபல நாட்டைச் சேர்ந்த சர்வதேச போதைப் பொருட்களை கடத்தும் கும்பலின் தலைவனை தமிழக காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தமிழகத்திலிருக்கும் தூத்துக்குடி கடலோரத்தில் அந்நியநாட்டை சேர்ந்த நபர் ஒருவர் சுற்றித் திரிவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சென்று கொண்டிருந்த சுமார் 50 வயதுடைய வெளிநாட்டு நபரை காவல்துறையினர் கண்டுபிடித்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோனாதன் தோர்ன் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இவரிடமிருந்து 2 ஐபோன்கள், இந்தியா மற்றும் இங்கிலாந்து நாட்டின் பாஸ்போர்ட்டுகளும், ஐக்கிய அரபு நாட்டின் 2000 திர்ஹாமும், இலங்கை மதிப்பில் 2 லட்ச ரூபாயும் காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதற்கிடையே இவர் இந்திய குடி உரிமையை பெறுவதற்காக கோவாவைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சில முக்கிய நாடுகளில் போதைப் பொருட்களை பறிமுதல் செய்தது தொடர்பாக ஜோனாதனை கைது செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு மும்பை சிறையிலிருந்த ஜோனாதன் பரோலில் வெளியே வந்தவுடன் சர்வதேச போதைப் பொருட்களை கடத்தும் கும்பலுடன் தொடர்பு கொண்டுள்ளார். மேலும் போதைப் பொருள்களை கடத்துவதற்காக ஐடியாவும் போட்டுக் கொடுத்துள்ளார். இதனையடுத்து பரோலில் வெளியே இருக்கும் ஜோனாதன் தூத்துக்குடிக்கு வந்து சட்டத்திற்கு புறம்பாக படகு மூலம் இலங்கைக்கு செல்வதற்கு திட்டம் தீட்டியுள்ளார். அதற்காக ஜோனாதன் இடைத்தரகரை சந்திக்கச் சென்ற நேரத்தில் காவல்துறை அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார். இந்நிலையில் இவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.