இனிமேல் பொது இடங்களுக்கு செல்ல கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள உணவகங்கள், கச்சேரி நடக்கும் இடங்கள், பொழுது போக்கு அமைப்புகள் போன்ற பகுதிகளுக்கு செல்ல இனிமேல் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கண்டிப்பாக தேவை. மேலும் திறந்தவெளியில் உட்கார்ந்து உண்ணுவதற்கோ மதுபானம் அருந்துவதற்கோ தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து பொது போக்குவரத்தை பயன்படுத்துவதற்கும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் இன்று முதல் அடுத்த ஆண்டு ஜனவரி வரை அமலில் இருக்கும். இது மேலும் நீட்டிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த விதிமுறைகளால் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வார்கள். அதற்காக இவ்வாறு விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று பெடரல் அரசு கூறியுள்ளது. இதன் மூலம் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்துவதற்காக முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.