வனத்துறையினருக்கு சொந்தமான மலையில் அனுமதியின்றி கட்டப்பட்டு வந்த கிறிஸ்துவ ஆலயப் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொருவளூர் எல்லையில் மோடங்கல் மலை ஒன்று இருக்கின்றது. இந்த மலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மூங்கில்துறைப்பட்டை சேர்ந்த தனிநபர் ஒருவர் சிறிய அளவில் கிறிஸ்தவ ஆலயத்தை கட்டி வருகின்றார். அதில் ஏசுநாதர் மற்றும் மாதா ஆகிய 2 சொரூபங்கள் தனித்தனியாக அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கிறிஸ்துவ ஆலயம் கட்டுவதற்கு அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கட்டுமானப் பணிகளை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த சங்கராபுரம் தாசில்தார் சையத்காதர் தலைமையில், வருவாய்த் துறையினர் மற்றும் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது வனத்துறையினருக்கு சொந்தமான மலையில் அனுமதி பெறாமல் தனிநபர் கிறிஸ்தவ ஆலயம் அமைக்கப்பட்டு வருவது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் வைத்து கட்டுமான பணிகளை தொடர்ந்து செய்யக்கூடாது என துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், வருவாய்துறை அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் அறிவுறுத்தினார். இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் அப்பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தினர். அப்போது வருவாய் ஆய்வாளர் அண்ணாமலை, கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் ஆகியோர் அவருடன் இருந்தனர்.