மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்ககோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள பாலூர் பகுதியில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி மக்களுக்கு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர் மூலமாக கிராம பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தை தேர்வு செய்ததாக கூறப்படுகின்றது. ஆனால் நீர்த்தேக்கத் தொட்டி கொண்டுவருவதில் காலதாமதம் ஏற்பட்டதால் அந்த இடத்தை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து கொட்டகை அமைத்து இருப்பதாக தெரிகின்றது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் பேரணாம்பட்டு தாசில்தார் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் கோபிநாத், துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ள கொட்டகையை அகற்றி பொதுமக்கள் பயனடையும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தபின் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.