மியான்மரை கைப்பற்றி அதனை ஆட்சி செய்து வரும் அந்நாட்டு ராணுவத்தினருக்கு எதிராக அமைதியாக போராடும் நோக்கில் பொதுமக்கள் பணிகளுக்கு செல்லாமல் அவர்களது வீட்டிலேயே இருந்துள்ளார்கள்.
மியான்மர் நாட்டில் கடந்தாண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சான் சூகி என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இவர் முறைகேடு செய்துதான் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்று கூறி அந்நாட்டு ராணுவம் அதன் ஆட்சியை கடந்த பிப்ரவரி மாதம் கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து அந்நாட்டு பொதுமக்கள் பலரும் மியான்மரில் நடைபெற்றுவரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக வீதியில் இறங்கி போராடி வருகிறார்கள்.
ஆனால் இதனை கொஞ்சம் கூட பொருட்படுத்தாத மியான்மர் ராணுவம் வீதியில் இறங்கி போராடி வரும் பொது மக்களின் மீது சரமாரியாக நடத்திய துப்பாக்கி சூட்டில் தற்போது வரை 1,300 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இந்நிலையில் மியான்மர் நாட்டின் பொதுமக்கள் அங்கு நடைபெறும் ராணுவ ஆட்சிக்கு எதிராக அமைதியான முறையில் போராட முடிவு செய்துள்ளார்கள்.
அதன்படி மியான்மர் நாட்டின் பொதுமக்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்கள். அதோடு மட்டுமின்றி மியான்மரின் பல முக்கிய பகுதிகளிலுள்ள வணிகம் சார்ந்த பகுதிகளும், கடைகளும் மூடப்பட்டதையடுத்து அந்நாட்டின் வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.