ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் கடை வீதிகளில் அலைமோதியுள்ளனர்.
தமிழகத்தில் பெரிதும் போற்றப்படும் பண்டிகைகளில் ஆயுத பூஜை விழா சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த விழாவை தமிழக மக்கள் சீரும் சிறப்புமாக அவரவர் இல்லத்தில் கொண்டாடி வருவது வழக்கமாக இருக்கிறது. இந்நாளில் கல்வி கற்கும் அனைவரும் தங்களின் புத்தகங்கள் மற்றும் வாகனங்களுக்கு பொட்டு வைத்து சரஸ்வதி தாய்க்கு அவல், பூமாலை, கொண்டக்கடலை, பொரி மற்றும் பழங்கள் படையல் வைத்து ஆயுத பூஜை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.
இதற்காக கடலூர் மாவட்டத்திலுள்ள உழவர் சந்தையில் மற்றும் அண்ணா மார்க்கெட்டில் கூட்டமாக பொதுமக்கள் திரண்டு வந்துள்ளனர். இம்மாவட்டத்தில் உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை அதிக அளவில் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து இம்மாவட்டத்தை சுற்றி இருக்கும் அனைத்து பகுதிகளிலும் இருந்து விற்பனைக்காக அதிக அளவில் வாழைத்தார்கள் சந்தைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதேபோல் வியாபாரிகள் சிலர் சென்னைக்கு ஆந்திர மாநிலத்திலிருந்து அதிக வாழைத்தார்களை விற்பனைக்காக கொண்டு வந்ததால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் தங்களின் வாழைத்தாரை உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்துள்ளனர். ஆனால் விலை வீழ்ச்சி காரணத்தினால் வாழைத்தார்கள் விற்பனையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் பூஜைக்கு தேவையான பொருட்களை மளிகைக்கடையில் வாங்குவதற்கு கடைவீதிகளில் பொதுமக்கள் அலைமோதி வந்தனர்.