விதை நெல் பண்ணையை குப்பை கிடங்காக மாற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் நகராட்சியை மாநகராட்சியாக மாற்றப்படும் என்பது குறித்து சட்டமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இம்மாவட்ட வெள்ளப்பாக்கம் பகுதியில் விதை நெல் பண்ணைக்கு சொந்தமான இடம் வருவாய் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்பின் வருவாய்த்துறையினர் இந்த இடத்தை மாநகராட்சிக்கு ஒப்படைக்க உள்ளதாகவும் மற்றும் இந்த இடத்தில் குப்பை கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் வருவாய் ஆய்வாளர் செல்வகுமார் தலைமையில் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வழி பாதை அமைப்பதற்கு இடத்தை ஆய்வு செய்வதற்காக சென்றுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த கிராம பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொதுமக்கள் கூறும் போது இப்பகுதியில் முழுவதும் விவசாயம் செய்து வருகின்ற நிலையில் நெல் பண்ணை குப்பை கிடங்காக மாற்றி அமைப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் இது போன்ற எந்த திட்டத்திற்கும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என கிராம மக்கள் கூறியுள்ளனர். அதற்கு அதிகாரிகள் தற்போது வழி ஏற்படுத்தும் நடவடிக்கை மட்டுமே செய்ய வந்ததாகவும் பின் எதிர்காலத்தில் குப்பை கிடங்கு அமைத்தாலும் மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து விவசாயிகளின் நலன் காப்போம் எனவும் கூறியுள்ளனர். இருப்பினும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கிருந்து அதிகாரிகள் சென்றுள்ளனர்.