பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பயிர்கள் தயிர்பள்ளம் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் இரண்டு நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. மேலும் உடைப்பு சரி செய்யப்பட்ட பிறகு பராமரிப்பு பணி காரணமாக அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டதால் மோட்டாரை இயக்க முடியாமல் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சத்தியமங்கலம் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையறிந்த காவல்துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மைதிலி சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அதிகாரிகள் பொதுமக்களிடம் மின்தடை ஏற்பட்டதால் குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் குடிநீர் விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இதனையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.