ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதறகான கால அவகாசம் ஜூன் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், வீடுகள், நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின்கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை மாதத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் எனக்கூறி ராஜசேகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில் சொத்துவரி, விவசாயக்கடன் தவணைகள் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மின்கட்டணத்தை செலுத்தும் கால அவகாசத்தை ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார். ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு முன்பு காணொலி மூலம் மீண்டும் விசாரணைக்கு வந்தபொழுது, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், மின்கட்டணம் செலுத்துவதறகான கால அவகாசத்தை ஜூன் 6ம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தெரிவித்தார். இதனை பதிக செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜூன் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.