இந்து சமய அறநிலையத்துறையின் அறிவுரைப்படி கோவில்களில் ஏற்படும் விபத்தை தடுப்பது குறித்த ஒத்திகை பயிற்சி நடைபெற்றுள்ளது.
கோவில்களில் ஏற்படும் தீ விபத்தை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அங்கு பணியாற்றும் அலுவலர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் ராமகிருஷ்ணன் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் முக்கிய கோவில்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
அதன்பின் கோவில்களில் அவசர தேவைக்கு ஏற்ப தீ தடுப்பு உபகரணங்கள் இருக்கின்றதா என்பது குறித்து ஆய்வு செய்து சான்று வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து உடுமலை தீயணைப்பு நிலைய வளாகத்தில் வைத்து தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அணைக்க வேண்டுமென கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில் கோவில் செயல் அலுவலர்கள் சீனிவாச சம்பத், நாகையா, பவானி, அம்சவேணி போன்றோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.