தேனி மாவட்டம் வீரபாண்டி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவன் ரெங்கநாதன்.. 28 வயதான இவன் மேடை அலங்காரம் செய்யும் வேலை செய்துவருகிறான். இவன் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசையாக பேசி, அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
இந்தநிலையில், ரங்கநாதனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதையறிந்த பாதிக்கப்பட்ட சிறுமி, நேற்று தற்கொலை செய்ய முயன்றார்.. அதன்பின் பத்திரமாக மீட்கப்பட்ட அந்த சிறுமி, சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் யாரும் புகார் அளிக்கவில்லை. இதையடுத்து தகவலறிந்த வீரபாண்டி போலீசார் தாமாகவே முன்வந்து ஆஸ்பத்திரியில் இருந்த சிறுமியிடம், வாக்குமூலம் பெற்று விசாரணை மேற்கொண்டனர்..
இதையடுத்து போலீசார் ரெங்கநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைதுசெய்து ஜெயிலில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி மாவட்டக் குழந்தைகள் நலக்குழுத் தலைவர் சுரேஷ்குமார் மற்றும் உறுப்பினர்கள் நாகேந்திரன், பழனிச்சாமி ஆகியோர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, கொடுவிலார்பட்டியில் உள்ள சிறுமிகள் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் பெற்றோர் மற்றும் உறவினர் துணையின்றி, சிறுமியின் சார்பில் தேவையான விவரங்களைத் திரட்டி குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுத்து சிறப்பாகச் செயல்பட்ட வீரபாண்டி பெண் போலீஸ் தீபாவை மாவட்டக் குழந்தைகள் நலக்குழுவினர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரன் தேஜஸ்வி ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.