மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை பயணம்.
மேற்குவங்க மாநிலத்தில் பிரதி என்ற கிராமத்தில் 1935ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி பிரணாப் முகர்ஜி பிறந்தார். இவரது தந்தை கமடா கின்ஹர் முகர்ஜி, சுதந்திர போராட்ட தியாகியாகவும், காங்கிரஸ் உறுப்பினராகவும் இருந்தவர். பிண்டம் மாவட்டத்தில் உள்ள சுரி வித்யாசாகர் கல்லூரியில் பி.ஏ. படிப்பை முடித்த பிரணாப் முகர்ஜி, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. அரசியல் அறிவியிலும், சட்டக் கல்வியிலும் பட்டம் பெற்றார்.
தான் படித்த அதே வித்யாசாகர் கல்லூரியில் துணைப் பேராசிரியராகவும், சிலகாலம் பத்திரிகையாளராகவும் பணியாற்றினார். மேற்கு வங்க இடைத் தேர்தலில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் தேர்தல் பிரச்சார உதவிகளை செய்த பிரணாப் முகர்ஜியின் நடவடிக்கைகளால் ஈற்கப்பட்ட முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, பிரணாப் முகர்ஜியை கடந்த 1969ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைத்தார். இதே ஆண்டு பிரணாப் முகர்ஜிக்கு காங்கிரஸ் கட்சியின் மூலம் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் மேலும் நான்கு முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 1973-ஆம் ஆண்டு அமைச்சரவையில் மத்திய தொழில் துறை அமைச்சகத்தில் துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது கடந்த 1982ம் ஆண்டு பிரணாப் முகர்ஜிக்கு மத்திய நிதியமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 1982 முதல் 84 வரை அவர் நிதியமைச்சராக பதவி வகித்தார். 1995ஆம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, 2000 ஆம் ஆண்டு மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். சுமார் 10 ஆண்டுகள் அந்தப் பதவியில் நீடித்த அவர், கடந்த 2010ஆம் ஆண்டு மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். 2004 முதல் 2006 ஆம் ஆண்டு வரை பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார்.
கடந்த 2009ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக நிதி அமைச்சராக பொறுப்பேற்ற அவர், மூன்று ஆண்டுகள் அந்த பதவியில் இருந்தார். கடந்த 2012ஆம் ஆண்டு இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2017ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவர் பதவியில் இருந்த பிரணாப் முகர்ஜி உடல் நலத்தை கருத்தில் கொண்டு இனி அரசியலில் ஈடுபட போவதில்லை என அறிவித்தார். பாரத ரத்னா பத்ம விபூஷண், ஆசியாவின் சிறந்த நிதியமைச்சர் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.