ஊரடங்கை ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்து மாநில தலைவர்களுடன் பிரதமர் மோடி நடத்தி வரும் ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த கோரிக்கையை வைத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக இன்று காலை 11 மணி அளவில் காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கொரோனா பாதிப்புகள் குறித்தும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மோடி ஆலோசனை வழங்கி வருகிறார். இந்த கூட்டத்தில், பல மாநில முதலைவர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊடரங்கு நீட்டிக்கப்படுவது மிகவும் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 77 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 911 பேராக அதிகரித்துள்ளது. இந்த 77 பேரில் 5 பேர் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள். அவர்களிடம் இருந்து 72 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக மருத்துவக்குழுவும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பரிந்துரை செய்ததை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த கோரிக்கையை வைத்துள்ளார்.