பிரபல தொழில் அதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்கல்பாளையம் பகுதியில் மதி என்கிற மதிவாணன் வசித்து வந்துள்ளார். இவர் நிதிநிறுவன அதிபராக இருந்துள்ளார். மேலும் இவர் சட்டமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க-வில் இணைந்துள்ளார். இந்நிலையில் மதிவாணனுக்கு சொந்தமான இ-சேவை மையம் கிருஷ்ணபாளையம் பகுதியில் அமைந்துள்ளது. இதனையடுத்து மதிவாணன் இ-சேவை மையத்தில் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்கள் மதிவாணனை அரிவாளால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த மதிவாணன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மதிவாணனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மதிவாணனை வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ராஜு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலை நிகழ்ந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் உள்ளிட்டவைகளை கொண்டு மதிவாணன் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது தொழில் போட்டியின் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளாரா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.