பிரபல தொழிலதிபரை காரில் கடத்தி வந்த மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் வெங்கடேஷ்வரலு என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போன் டவர் அமைக்கும் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் இவரை ஆந்திராவிலிருந்து மர்மநபர்கள் ராணிப்பேட்டை பகுதிக்கு காரில் கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வெங்கடேஸ்வரலுவின் செல்போன் சிக்னலை வைத்து மேல்விசாரம் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர்.
அந்த சோதனையில் பிரபல தொழிலதிபர் வெங்கடேஸ்வரலு காரில் கடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. அதன்பின் வெங்கடேஸ்வரலுவை மீட்ட காவல்துறையினர் காரில் வந்த ஆம்பூர் பகுதியில் வசிக்கும் செல்வராஜ், அருண் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் விசாரணையில் தொழிலதிபரான வெங்கடேஸ்வரலு செல்போன் டவர் அமைப்பதாக கூறி 40 லட்சம் ரூபாய் பலரிடம் மோசடி செய்ததாக காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்