பிரபல தொழிலதிபரை காரில் கடத்தி வந்த மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் வெங்கடேஸ்வரலு என்பவர் வசித்து வருகின்றார். மேலும் தொழிலதிபரான இவர் செல்போன் டவர் அமைக்கும் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் வெங்கடேஸ்வரலுவை மர்ம நபர்கள் ராணிப்பேட்டை பகுதிக்கு கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வெங்கடேஸ்வரலுவின் செல்போன் சிக்னலை வைத்து மேல்விசாரம் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படி வந்த காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர்.
அந்த சோதனையில் பிரபல தொழிலதிபரான வெங்கடேஸ்வரலு காரில் கடத்தப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் வெங்கடேஸ்வரலுவை மீட்ட காவல்துறையினர் காரில் வந்த ஆம்பூர் பகுதியில் வசிக்கும் செல்வராஜ், அருண் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் காரில் வந்த இருவர் தப்பி ஓடியுள்ளனர். அந்த விசாரணையில் தொழிலதிபரான வெங்கடேஸ்வரலு செல்போன் டவர் அமைப்பதாக கூறி 40 லட்சம் ரூபாய் பலரிடம் மோசடி செய்ததாக காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய சங்கர், மோகன் ஆகிய இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.