வானிலிருந்து கல்மழை பொழிந்தது வறுமையில் வாடிய மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது
பிரேசிலில் சான்டா பிலோமினா நகரத்தில் வாழும் 90 சதவீத மக்கள் வறுமையில் வாடும் விவசாயிகள் ஆவர். தற்போதைய சூழலில் அத்தியாவசிய தேவைகளை எப்படி பூர்த்தி செய்வது என கலங்கி நின்ற மக்களுக்கு வானிலிருந்து பண மழை பொழிந்து உள்ளது. எடிமார் என்ற மாணவன் திடீரென அந்நகரில் வானம் அதிக அளவு புகைமூட்டமாக காணப் படுவதைப் பார்த்து ஆச்சரியமாக நின்றுள்ளான். அச்சமயம் அவரது நண்பர்கள் வாட்ஸ்அப் மூலம் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் வானத்திலிருந்து பாறைகள் விழுவதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து வெளியில் வந்த எடிமார் வானிலிருந்து கல்லொன்று விழுந்ததை கவனித்துள்ளார். அவர் சென்று அந்த கல்லை எடுத்தபோது அது 164 கிராம் எடை இருந்தது. மாணவனை போன்றே அந்த நகரில் வசித்த மக்கள் பல இடங்களில் விழுந்த கற்களை சேகரித்தனர். அதில் ஒருவருக்கு அதிகபட்சமாக 40 கிலோ எடை கொண்ட கல் கிடைத்தது. வானிலிருந்து விழுந்த அந்த கற்கள் சாதாரணமானவை இல்லை. பூமி உருவாவதற்கு முன்பு சூரிய குடும்பத்தில் தென்பட்ட அரிய வகை கற்கள் ஆகும்.
எனவே அந்த கற்களை வாங்குவதற்கு பலர் தயாராக இருந்தனர். இதனால் இந்த மாதத்தின் மளிகை பாக்கியை எப்படி கொடுப்பது என்று தெரியாமல் துயரத்தில் இருந்த ஏழை மக்கள் தற்போது வானில் இருந்து விழுந்த அரிய கற்களினால் பணக்காரர்களாகிவிட்டனர். ஒவ்வொருவரும் தங்களுக்கு கிடைத்த கற்களை விற்கத் தொடங்கினர். அவ்வகையில் எடிமார் தனக்கு கிடைத்த கல்லை ஆயிரம் பவுண்டுகளுக்கு விற்றுள்ளார்.
அதேபோன்று மற்றொருவர் 2.8 கிலோ எடை கொண்ட கல்லை 15 ஆயிரம் பவுண்டுகளுக்கு விற்றார். அதிகபட்ச எடை கொண்ட 40 கிலோ கல்லை விற்பதற்கு பேரம் நடைபெற்று கொண்டிருக்கின்றது. இதில் மற்றொரு ஆச்சரியம் மிக்க விஷயம் என்னவென்றால் நகரில் இருக்கும் தேவாலயத்தின் அருகே அதிக அளவில் விண்கற்கள் விழுந்துள்ளது. இதனால் நகர மக்கள் இது கடவுள் அனுப்பிய பரிசு தான் என நன்றி கூறி வருகின்றனர்.