மூன்று மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள போயர் காலனி பகுதியில் மணிஷ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமலதா என்ற மனைவி உள்ளார். இவருக்கு ஏற்கனவே செந்தில் என்பவருடன் திருமணம் நடைபெற்து 2 வயது பெண் குழந்தை இருக்கின்றது. ஆனால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஹேமலதா செந்திலை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இதனையடுத்து ஹேமலதா அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் மணிஷ்வரன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். தற்போது ஹேமலதா 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் ஹேமலதா தனக்கு வயிறு வலிப்பதாக மணிஷ்வரனிடம் வேலைக்கு புறப்பட்டபோது கூறியிருக்கிறார். அதன் பின் மாலையில் தனது வீட்டிற்கு சென்ற மணிஷ்வரன் ஹேமலதா சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக பெருமாநல்லூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து விட்டனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.