ரஷ்யப் படையின் கொடூர தாக்குதலில் இடுப்புப்பகுதி நசுங்கி கர்ப்பிணி பெண் குழந்தையுடன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 19ஆம் நாளாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. அந்நாட்டின் மரியுபோல் நகரத்தில் ரஷ்ய படைகள் பயங்கரமாக தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் ஒரு கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக அங்கிருக்கும் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
அப்போது திடீரென்று ரஷ்யப் படைகள் அந்த மருத்துவமனை மீது குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது. இக்கொடூர தாக்குதலில் அந்த கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் வழிந்தது. ஆம்புலன்ஸ் மூலம் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி காண்போரின் கண்களை குளமாக்கியது. மருத்துவர்கள் அந்த பெண்ணிடம் வயிற்றில் இருக்கும் சிசு உயிரிழந்து விடும் என்று தெரிவித்துள்ளனர். எனவே, அந்த பெண் தன்னையும் கொன்று விடுமாறு கதறி அழுதுள்ளார். மருத்துவர்கள், அந்த கர்ப்பிணிப் பெண்ணின் இடுப்பு பகுதி நசுங்கி துண்டிக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்கள்.
அதன் பின்பு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்து விட்டனர். ஆனால் குழந்தை இறந்து விட்டது. அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரும் பரிதாபமாக பலியானார். ரஷ்யாவின் இந்த நடவடிக்கை கடுமையாக கண்டனத்துக்குள்ளானது.