திருமணமான 6 மாதத்திலேயே கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாயக்கனூர் கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி பகுதியில் வசிக்கும் ராம்கி என்பவருடன் ராஜேஸ்வரிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது ராஜேஸ்வரி இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் நாயக்கனூரில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டில் ராஜேஸ்வரி தனது கணவருடன் தங்கியுள்ளார். இதனையடுத்து அதிகாலை வேளையில் கண்விழித்த ராம்கி மின்விசிறியில் தனது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு ராஜேஸ்வரியின் பெற்றோர் உடனடியாக விரைந்து சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த சிங்காரப்பேட்டை காவல்துறையினர் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.