பெரும்பாலும் 18 முதல் 20 வயதில் திருமணம் செய்கிறவர்கள், 30க்கும் மேல் திருமணம் செய்கிறவர்களுக்கு தங்களது முதல் கர்ப்பத்தில் உயர் ரத்த அழுத்தம் வரலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது முதல் கர்ப்பத்தை தொடர்ந்து அடுத்தமுறையும் வரலாம். இதை ஆங்கிலத்தில் ‘ப்ரெக்னன்சி இன்ட்யூஸ்டு ஹைப்பர் டென்ஷன்’ (பி.ஐ.ஹெச்) என்பார்கள்.
உலகெங்கிலும் உள்ள கர்ப்பிணிகளில் சுமார் 2 முதல் 10 விழுக்காடு பேரை உயர் ரத்த அழுத்தம் பாதிக்கிறது. இந்த பிரச்னையில் குழந்தையை பாதிக்காமல் தாயை பாதுகாக்க முற்றிலும் மாறுபட்ட வழிகளை கையாள வேண்டும் என்கிறார் மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிறப்பு மருத்துவர் பூர்வா சஹாகரி.
கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம்
ஒரு பெண் கருவுறுவதற்கு முன்னர் அல்லது கருவுற்ற ஐந்து மாதங்களில் (20 வாரங்கள்) கர்ப்பம் குறித்த பதற்றத்தில் இருப்பார். அப்போது உயர் ரத்த அழுத்தம் ஏற்படலாம். மருத்துவ பரிசோதனையில் ரத்த அழுத்தம் தொடர்ந்திருந்தால் அவை நாள்பட்ட உயர் ரத்த அழுத்தமாகும்.
கருவுற்ற 5 மாதங்களில் ஏற்படும் உயர் ரத்த அழுத்தத்தினால் சிறுநீர் கழிக்கும் போது புரதம் வெளியேறும்.
ஒரு வேளை ஐந்து மாதங்களுக்கு பின்னர் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுமானால், சிறுநீர் பரிசோதனை புரதத்தின் இருப்போடு தொடர்புடையதல்ல.
ரத்த அழுத்தத்தில் சுருங்குவதும் விரிவடைவதும் 120 /80 ஆகத்தான் இருக்கும். கர்ப்பக் காலத்தில் 140/90 எம்எம் ஹெச்.ஜி (mm Hg)என்று அதிகமாகும் போது அது உயர் ரத்த அழுத்தம் எனக் கூறப்படுகிறது. சிறுநீரில் வெளியேறும் புரத்தின் அளவைக் கொண்டு இதனைக் கண்டறியலாம்.
யாருக்கு அதிக பாதிப்பு?
முதல் கர்ப்பம்
40 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோர்
முந்தைய கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோர்
குடும்பப் பின்னணியில் ரத்த அழுத்த பிரச்னை இருப்பவர்கள், சிறுநீரக கோளாறு உள்ளவர்கள், நீரிழிவு உள்ளவர்கள், உடல் பருமனானவர்கள், நிரிழிவு நோய் பாதிக்கப்பட்டவர்கள், ஒன்றுக்கு மேலான குழந்தைகளைச் சுமப்பவர்கள், புகைப் பிடிப்பவர்கள், சிறுநீரகம் தொடர்புடைய நோயுடையவர்களுக்கு இந்த பிரச்னை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
எப்படி கண்டறியலாம்?
- முகம், கால், கைகளில் வீக்கம்.
- தலை வலி, பயம், பார்வை குறைபாடு, வயிற்று வலி, திடீர் குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை.
பாதிப்புகள்
- ஒரு கர்ப்பிணியின் உயர் ரத்த அழுத்தம் தாய்-சேய் இருவரையும் பாதிக்கும். இதனால் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைப் பெறுவது அவசியம். சிலருக்கு கர்ப்பத்தின் ஏழாவது மாதத்தில் இந்த ரத்த அழுத்தம் அதிகரித்து குறைபிரசவம் ஆகலாம். சிலருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்து சிறுநீரகங்களும், இதயமும் பாதிக்கப்படுவதுடன், மூளையிலுள்ள ரத்தக் குழாய்களில் கசிவு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
- உயர் ரத்த அழுத்தம் கருவிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கும், குழந்தை திடீரென வயிற்றிலேயே உயிரிழக்கவும் வாய்ப்பு உண்டு.
- குழந்தை எடை குறைவாகப் பிறப்பது, நஞ்சு பிரிந்து தாய்க்கும், குழந்தைக்கும் ஆபத்து ஏற்படுவது போன்றவை எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் மருத்துவர் கண்காணிப்பு அவசியம்.
தடுக்க என்ன செய்யலாம்?
- கருவுற்ற தொடக்கம் முதல் ரத்த அழுத்தப் பரிசோதனையைத் தவறாமல் செய்ய வேண்டும். உரிய சிகிச்சையை மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்து கொள்ள வேண்டும்.
- ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் போது தவறாமல் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- கர்ப்ப காலத்தில் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான பயிற்சிகளாக யோகா, தியானம் முதலானவற்றில் ஈடுபடலாம். உடல் சோர்வான நிலையில் இருந்தாலும் இயன்றவரை நடைபயிற்சி மேற்கொள்வது நல்லது.
சுக பிரசவமா (அ) அறுவை சிகிச்சையா?
இதைத் தனித்து விளக்கமுடியாது. அது ஒவ்வொரு கர்ப்பிணிகளுக்கும் வேறுபடும். அதைப் பொறுத்து தான் மருத்துவர் தீர்மானிக்க முடியும். குறிப்பிட்ட அறிகுறிகள் (அ) சிக்கல்களைக் கொண்டவர்களுக்கு அறுவைச் சிகிச்சை மூலம் தான் பிரசவம் செய்யப்படுகிறது.
பிரசவத்திற்கு பின்னர் ரத்த அழுத்தம் இருக்குமா?
நிச்சயமாகச் சொல்லிவிட முடியாது என்கிறார் மருத்துவர் பூர்வா. சிலர் பிரசவத்திற்குப் பிறகும் தங்கள் மருந்துகளைத் தொடர வேண்டியிருக்கலாம். சிலருக்கு பிற்காலத்தில் வரவும் வாய்ப்புள்ளது. இதை தடுக்க உடல் பருமனைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவு, மன அழுத்தம் இல்லாத சூழல் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.