அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கிடைத்து விடும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சீனாவில் தொடங்கி சர்வதேச அளவில் பரவி 200க்கும் மேற்பட்ட நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. முக்கியமாக வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனாவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது.. அங்கு தினமும் பலி எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சீக்கிரம் இதற்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது அமெரிக்கா.. இருப்பினும் இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை.
இந்த நிலையில் தான் வாஷிங்டன் டி.சி.யில் இருக்கும் லிங்கன் மெமோரியலில் இருந்து ஒளிபரப்பு செய்யப்பட்ட ஒரு பாக்ஸ் நியூஸ் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்த ஆண்டின் இறுதியில் ஒரு தடுப்பூசி கண்டிப்பாக கிடைத்து விடும் என்று நாங்கள் நம்புகின்றோம். மீண்டும் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் செப்டம்பர் மாதத்தில் திறக்கப்படும். மாணவ மற்றும் மாணவிகள் கல்வி கற்பதற்கு செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
மேலும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்களை தவிர வேறு ஏதாவது நாடு தடுப்பூசியை கண்டுபிடித்தது என்றால் நான் அவர்களை வாழ்த்துவேன். தடுப்பூசி நல்ல வகையில் கிடைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அமெரிக்காவில் தற்போது வரை கொரோனா வைரசால் 11,88,112 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதில் 68,598 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.