தொற்றுநோய்கள் (திருத்த) கட்டளைச் சட்டத்தை அவரச சட்டமாக அறிவிக்க ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
2020ம் ஆண்டின் படி இந்த திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிரான பணிகளில் முன்னணியில் இருக்கும் சுகாதார ஊழியர்கள் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மக்களின் உயிரைக்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என மத்திய அரசு கண்டனம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களை துன்புறுத்தினால் 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியிருந்தார்.
மேலும், சிறை தண்டனையுடன் ரூ. 1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அபாதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். இதுமட்டுமன்றி, வன்முறையில் ஈடுபட்டு பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவோரிடம் இருந்து அபராதமாக இரு மடங்கு தொகை வசூலிக்கப்படும் எனவும் உத்தரவிட்டிருந்தார். இதற்காக, கடந்த 1897-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட தொற்று நோய்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்.
இந்த அவசரச் சட்டத்தின் மூலம், பணியிடத்திலும் தாங்கள் குடியிருக்கும் பகுதியிலும் மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறை பணியாளா்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், இந்த அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார்.